search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்புமனு தாக்கல்"

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.

    இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ததால் திருவிழா கோலமாக காணப்பட்டது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    இதில் முறையாக பூர்த்தி செய்யாமல் இருந்த மனுக்களும் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் கையெழுத்திடாமல் இருந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று மாலை 3 மணி வரை மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வழக்கறிஞருடன் வந்து வேட்புமனு பரிசீலனையில் கலந்து கொண்டனர்.

    யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் நிலையில் மாற்று வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்த பிறகு சனிக்கிழமை மாலை 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிய சின்னங்கள் என்ன என்பது அறிவிக்கப்படும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. தேர்தல் பணியில் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை அகரவரிசைப்படி அச்சடிக்கும் பணி 30-ந் தேதியில் இருந்து தொடங்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏற்கனவே முதற்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பயிற்சிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் இளம் தலைமுறை வாக்காளர்களிடையே வாக்களிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    10 லட்சத்து 90 ஆயிரத்து 547 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

    சனிக்கிழமை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம்.
    • விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. கோவை தொகுதியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வழக்கமாக தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம். அதேபோல கோவை தொகுதியிலும் அந்த ருசிகரம் அரங்கேறி உள்ளது.

    கோவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்ளிட்டோர் போட்டியிடு வதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

    இவர்களில் தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் பெயரில் மட்டும் ராஜ்குமார் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதேபோல சிங்கை ராமச்சந்திரன் பெயரை குழப்பும் வகையில் ராமச்சந்திரன் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை பெயரிலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி என்ற கட்சி பெயரில் அவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியலில் எத்தனை ராஜ்குமார், எத்தனை ராமச்சந்திரன் போட்டியிடப் போகிறார்கள் என்ற முழு விவரம் தெரியவரும்.

    போட்டி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் பட்சத்தில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    • தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
    • வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக நடக்கும் ஏப்ரல் 26-ந்தேதி, கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 20 மக்களவை தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறும் எனவும், வருகிற 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளான இன்று ஒரு சிலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

    வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந்தேதி நடைபெறுகிறது. அங்கு வேட்பு மனுக்களை வாபஸ் பெற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே வேட்புமனு பெற வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

    வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை ஊதியம் பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவ னங்கள் மற்றும்வணிக மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது.

    • தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
    • அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.

    பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

    அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

    இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    • கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
    • மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30-ந் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.

    தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பலகட்ட பணிகளை பக்குவமாக முடித்த தலைவர்கள், தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.

    ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர். ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று அவர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    இதில் பங்குனி உத்திர தினமாக கடந்த 25-ந் தேதி மிகவும் நல்லநாள் என்பதால், அன்றைய தினத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அதே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அன்று மட்டும் ஒரே நாளில் 403 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    நேற்று முன்தினமும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இதனால் தேர்தல் அலுவலகங்களில் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

    சில இடங்களில் 3 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. சார்பில் நீலகிரியில் மீண்டும் களம் இறங்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தென்சென்னையில் போட்டியிடும் தயாநிதிமாறன், அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர்.

    பா.ஜனதா சார்பில் கோவையில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய்வசந்த் (கன்னியாகுமரி), ஜோதிமணி (கரூர்) ஆகியோரும் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தென்சென்னையில் 64 மனுக்களும், மத்திய சென்னையில் 58 மனுக்களும், வடசென்னையில் 67 மனுக்களும், கரூரில் 73 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளது.

    இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கடைசி நாளில் சுயேச்சைகளே அதிக அளவில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30-ந் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர் அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் தனது Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த Audi A4 சொகுசு காருக்கு தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இன்சூரன்ஸ் இல்லாத Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரத்தில் போட்டியிட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் நாளை மனுதாக்கல் செய்கிறார்.
    • காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்த தொடங்கி விட்டனர்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் நல்ல நாளான நேற்று மனுதாக்கல் செய்து உள்ளனர். அதிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட் பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் 80 சதவீதம் வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்து உள்ள நிலையில் மற்ற வேட்பாளர்கள் நாளை (புதன் கிழமை) மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கி உள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சியிலும் நேற்று முக்கிய பிரமுகர்கள் மனுதாக்கல் செய்திருந்தாலும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நாளைதான் மனு தாக்கல் செய்கிறார். சிதம்பரத்தில் போட்டியிட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் நாளை மனுதாக்கல் செய்கிறார்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நேற்று வரை 405 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்றும் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. அதற்கான படிவம் கிடைத்ததும் சின்னம் ஒதுக்கப்பட்டு விடும்.

    மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாரும் கேட்காமல் இருந்தால் அந்த சின்னம் கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் முடிவு செய்து வேட்பாளரின் சம்மதத்துடன் வேறு சின்னங்களை ஒதுக்கும். வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகே இந்த பணிகள் வருகிற 30-ந்தேதி நடைபெறும்.

    இதனால் சின்னம் கிடைக்காமல் சில வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலையும் உருவாகி உள்ளது.

    • தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் நேற்று பவுர்ணமி நாளில் எல்லா அரசியல் கட்சி வேட்பாளர்களும் வரிசையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களுடன் முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றைய தினத்தை மிகவும் நல்ல நாளாக கருதியதால் 75 சதவீதம் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சிகளில்தான் இன்னும் சிலர் மனுதாக்கல் செய்வதற்கு நாளைய தினத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரின் சொத்து விவரங்கள், மனைவியின் சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டி உள்ளதால் ஒரு முறைக்கு இருமுறை அவற்றை சரி பாார்த்து வழக்கறிஞருடன் ஆலோசித்த பிறகே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற கட்சியினர் அவரவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் வேட்பு மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்து வருகின்றனர்.

    வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் என்பதால் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் நாளை மனுதாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
    • தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் 3 தொகுதி களுக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. 20-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் நேற்று வரை அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உற்சாகமாக மனு தாக்கல் செய்தனர்.

    பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்பதால் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி வரிசையாக அழைக்கப்பட்டனர்.

    நேற்று நல்லநாளாக இருந்ததால் அரசியல் கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 3 தொகுதிகளிலும் சேர்த்து 52 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வடசென்னையில் தான் அதிகபட்சமாக 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் 21 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 16 பேரும், சுயேச்சைகள் 15 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வது முடி வடைவதால் இன்றும் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மாலைக்குள் வேட்பு மனு செய்வோரின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறுவதை தொடர்ந்து சென்னையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.
    • இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியை தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதனால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.

    தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    போக்குவரத்து சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×